சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 100 ரிங்கிட் கூடுதல் உதவியைப் பெற மலேசியர்களுக்கு எந்தப் பதிவும் தேவையில்லை. ஏனெனில் இந்த உதவி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தானாகவே வழங்கப்படும் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் தெரிவித்தார். மலேசிய குடிமக்களுக்கு எந்த பதிவும் அல்லது விண்ணப்பமும் தேவையில்லை. ஏனெனில் சாரா பண உதவிக்கான தகுதி மை கார்டு வைத்திருக்கும் அனைத்து வயதுவந்த குடிமக்களின் தரவையும் அடிப்படையாகக் கொண்டது.
தேசிய பதிவுத் துறையின் (NRD) மை கார்டு தரவு இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்று வியாழக்கிழமை (ஜூலை 31) மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது அமீர் ஹம்சா கூறினார். 100 ரிங்கிட் உதவி தொடர்பாக எந்தவொரு மோசடி செய்பவர்களிடமும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் மலேசியர்களுக்கு அறிவுறுத்தினார். அவரது கூற்றுப்படி, 100 ரிங்கிட் உதவி ஒரு குடும்பத்திற்கு அதிகமான குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அதிக உதவி பெற அனுமதிக்கிறது.
உதாரணமாக, ஒரு கணவன் மற்றும் மனைவி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பமாக இருந்தால் அவர்கள் மொத்தம் 500 ரிங்கிட்டை பெறுவர் என்று அவர் கூறினார். முட்டை, அரிசி, மருந்து போன்ற 14 வகைகளில் 90,000 க்கும் மேற்பட்ட அன்றாடத் தேவைகளை உள்ளடக்கிய 4,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் 100 ரிங்கிட்டை செலவிடப்படலாம் என்று அமீர் ஹம்சா கூறினார். 100 ரிங்கிட் உதவியை ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31, 2025 வரை பயன்படுத்தலாம்.